தமிழக சட்டப்பேரவையில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முயன்ற நிலையில், அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் உள்ள தவெக அரசு எதற்கும் அனுமதி வழங்குவதில்லை; முந்தைய திமுக அரசு கூட இந்த விஷயத்தில் சரியாக நடந்துகொண்டது” எனச் சாடினார். மேலும், தவெக அரசு மக்கள் பிரச்சினைகளை சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை என்றும், வெறும் ரீல்ஸ் போட்டு ரீல்ஸ் ஆட்சியை மட்டுமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இதனிடையே, “முன்பிருந்த அதிமுக இப்போது இல்லை; தற்போதுள்ள அதிமுக அதிமுகவே இல்லை” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ஏதோ ஒரு வகையில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிட்டதாலேயே இப்படிப் பேசுகிறார்கள் என்று பதிலடி கொடுத்தார். கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில், இந்தக் கட்சி எதிர்காலத்தில் இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார். எந்த அளவிற்கு இந்தக் கட்சி மிக வேகமாக அதிகாரத்திற்கு வந்ததோ, அதே வேகத்தில் படுபாதாளத்திற்கும் சென்றுவிடும் எனத் தெரிவித்த அவர், ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
