“மைதானத்தில் பவுடர் நுணுக்கிய அமைச்சர்”…. உதயநிதி எழுப்பிய கேள்வி… சட்டப்பேரவையில் கதறிய தவெக… காரசார விவாதம்…!

By Nanthini on ஆவணி 17, 2026

Spread the love

கோவை மாணவன் அமுதன் படுகொலை சம்பவம் தொடர்பாக, தமிழக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. சட்டப்பேரவையில் போதைப்பொருள் புழக்கம் குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் கிரிக்கெட் மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகச் சமூக வலைதளங்களில் வெளியான காணொளியைச் சுட்டிக்காட்டினார். மேலும், “அமைச்சரிடம் காவல்துறை விசாரணை நடத்தியதா? அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?” என்று கேள்விகளை எழுப்பி கடுமையாகச் சாடினார்.

உதயநிதியின் விமர்சனங்களுக்குப் பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் சரத்குமார், மைதானத்தில் நடந்த சம்பவம் குறித்த தன் தெளிவுரையை ஏற்கெனவே வழங்கிவிட்டதாகக் குறிப்பிட்டார். “அந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில் அப்போதைய ஆட்சியில் இருந்தது திமுக தான்; அப்படிப் பார்த்தால், கிரிக்கெட் மைதான வளாகத்தின் வாசலில் திமுக அரசு தான் போதைப்பொருளை விற்றதா?” என்று கேள்வி எழுப்பிய அவர், ஆதாரம் இல்லாமல் எதிர்க்கட்சியினர் தேவையில்லாமல் குற்றம்சாட்டக் கூடாது எனப் பதிலடி கொடுத்தார்.

   

தொடர்ந்து பேசிய சரத்குமார், திமுக ஆட்சிக்காலத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 888 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். இந்த ஊழல் புகாரைக் குறிப்பிட்டுத் தம்மாலும் பேச முடியும் என்றும், போதிய ஆதாரங்கள் இன்றி ஊடகச் செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு சட்டப்பேரவையில் விவாதிப்பது ஏற்புடையது அல்ல என்றும் அழுத்தமாகக் கூறினார்.

   

சரத்குமாரின் இந்தப் பேச்சுக்கு உடனடி எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மட்டுமே அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என ஆவேசப்பட்டார். நீதிமன்ற விசாரணையில் இருக்கும் ரூபாய் 888 கோடி விவகாரத்தை அவையில் பேசுவது சட்டமுறைப்படி சரியாக இருக்காது என்றும், எனவே சரத்குமாரின் அந்தப் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.