பிதாபுரம் பாஸ்கர் சிறப்பு நகராட்சி பள்ளியில் தற்போது ஒரே ஒரு மாணவர் மட்டுமே படித்து வருகிறார். எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், நாட்டின் சுதந்திர தின விழாவை எந்தவித குறையுமின்றி சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதில் பள்ளி தலைமை ஆசிரியர் நாகேஸ்வர ராவ் உறுதியாக இருந்தார். அந்த ஒரு மாணவனின் மனதிலும் தேசப்பற்றையும் தன்னம்பிக்கையையும் விதைக்கும் நோக்கில் இந்த விழா திட்டமிடப்பட்டது.
பள்ளி ஆசிரியர் நாகேஸ்வர ராவ், ஒரு மாணவன் மட்டுமே இருக்கிறான் என்ற எண்ணத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். மாணவனுக்கு இனிப்புகள் வழங்கி, சுதந்திர போராட்ட தியாகிகளின் பெருமைகளையும், நாட்டின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். ஆசிரியரின் இந்த அர்ப்பணிப்பு உணர்வும் தேசப்பற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்றது.
https://twitter.com/TV9Telugu/status/2088544249868439952/video/1
இந்த நிகழ்வு வெறும் இருவருடன் மட்டும் நின்றுவிடவில்லை. இந்த நெகிழ்ச்சியான விழாவைக் காணவும் ஆதரவு அளிக்கவும் 30-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர். அதுமட்டுமின்றி, அப்பகுதியைச் சேர்ந்த பிற சிறுவர்களும் குழந்தைகளும் உற்சாகத்துடன் வருகை தந்து, அந்த ஒரு மாணவருடன் இணைந்து சுதந்திர தின விழாவைக் கொண்டாடி விழாவை மேலும் சிறப்பித்தனர்.
