பீகார் மாநிலம் ஹாஜிப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட திகி நயா பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரரான ராம் நரேஷ் ராய் என்பவர், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவரது குடும்பத்தினர் பாட்னாவில் வசித்து வரும் நிலையில், இன்று காலை இவர் வழக்கம்போல் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்திறங்கிய ஆயுதமேந்திய நபர்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராம் நரேஷ், அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். இருப்பினும், அவரை விடாமல் துரத்திய அந்த கும்பல், அவர் மீது நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தப் படுகொலைக்கு முன்விரோதமே முக்கிய காரணம் எனத் தெரியவந்துள்ளது. உயிரிழந்த ராம் நரேஷுக்கும், முகேஷ் ராய் என்ற நபருக்கும் இடையே ஏற்கனவே பகை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, பொதுஇடத்தில் சுமார் 50 பேர் முன்னிலையில் வைத்து ராம் நரேஷை கொலை செய்யப்போவதாக முகேஷ் பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்ததும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த மிரட்டலின் பின்னணியிலேயே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளதா என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
