தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் நடைபெற்ற விவாதங்களின்போது, தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை குறித்து திமுக மற்றும் அதிமுகவினருக்கு இடையே காரசார விவாதம் எழுந்தது. லாட்டரி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட நன்கொடை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட சூழலில், தேர்தல் பத்திரங்கள் மூலம் இந்தியாவில் எந்தெந்த அரசியல் கட்சிகள் எவ்வளவு நிதியைப் பெற்றுள்ளன மற்றும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் யாருக்கெல்லாம் எவ்வளவு நிதி வழங்கியுள்ளது என்பது குறித்த விரிவான விபரம் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசால் 2018-இல் கொண்டுவரப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டம், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனத் தெரிவித்து உச்ச நீதிமன்றம் அதனைச் செல்லாது என அதிரடியாக ரத்து செய்தது. மேலும், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நன்கொடை விபரங்களை வெளிப்படையாக வெளியிடுமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி வெளியான தரவுகளின்படி, மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அதிகபட்சமாக ரூ.6,986 கோடிக்கும் அதிகமாக நன்கொடை பெற்று முதலிடத்தில் உள்ளது. இதற்கடுத்தபடியாக, மேற்கு வங்கத்தின் திரிணமூல் காங்கிரஸ் ரூ.1,397 கோடியும், காங்கிரஸ் கட்சி ரூ.1,334 கோடியும், தெலங்கானாவின் பாரத் ராஷ்டிர சமிதி ரூ.1,322 கோடியும் நன்கொடையாகப் பெற்றுள்ளன.
தமிழகத்தின் திமுக தேர்தல் பத்திரங்கள் வாயிலாக மொத்தம் ரூ.656.5 கோடி நிதி பெற்றுள்ளது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், திமுக பெற்ற மொத்த நன்கொடையில் சுமார் 77 சதவீதத் தொகையை, அதாவது ரூ.509 கோடியை ‘லாட்டரி அதிபர்’ சாண்டியாகோ மார்ட்டினுக்குச் சொந்தமான ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனமே வழங்கியுள்ளது. இது தவிர மேகா இன்ஃபாஸ்ட்ரக்சர் நிறுவனம் ரூ.105 கோடியையும், சன் டிவி நிறுவனம் ரூ.10 கோடியையும் திமுகவிற்கு வழங்கியுள்ளன.
தேர்தல் பத்திரங்களை அதிகளவில் வாங்கிய நிறுவனங்களின் பட்டியலில் ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் மொத்தம் ரூ.1,368 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வாங்கி இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நிறுவனம் தனது நன்கொடையை திமுகவிற்கு மட்டுமின்றி பிற முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் பகிர்ந்து அளித்துள்ளது. அதன்படி, திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.542 கோடியும், ஆந்திராவின் YSR காங்கிரஸ் கட்சிக்கு ரூ.154 கோடியும், பாரதிய ஜனதா கட்சிக்கு ரூ.100 கோடியும், காங்கிரஸ் கட்சிக்கு ரூ.50 கோடியும் இந்த லாட்டரி நிறுவனம் நன்கொடையாக வழங்கியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
