நாக்பூரைச் சேர்ந்த 16 வயது பிளஸ்-2 மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராம் மற்றும் கேமிங் செயலிகள் மூலம் தானேவைச் சேர்ந்த BBA மாணவரான ஆகாஷ் (20) என்பவருடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டுள்ளார். நண்பர்கள் தினத்தில் சந்திக்கத் திட்டமிட்டு, தோழியுடன் வணிக வளாகத்திற்குச் செல்வதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், சிறுமியின் சமூக வலைதளக் கணக்குகளை ஆய்வு செய்த காவல்துறையினர், ஆகாஷ் மீது சந்தேகம் கொண்டு தீவிர விசாரணையைத் தொடங்கினர்.
ஆகாஷ் அச்சிறுமியை நாக்பூரில் உள்ள தனது வாடகை வீட்டிற்கு அழைத்துச் சென்று, இரண்டு நாட்களாகக் கடத்தி வைத்துப் பாலியல் வன்கொடுமையும் கொடூரச் சித்திரவதையும் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. காவல்துறையினர் ஆகாஷின் பெற்றோர் மூலம் அவரைத் தொடர்புகொண்டு வீட்டிற்கு வருமாறு அழுத்தம் கொடுத்தனர். காவல்துறை தன்னைத் தேடுவதை அறிந்த ஆகாஷ், தான் நலமாக இருப்பதாகப் பெற்றோரிடம் போனில் கூறுமாறு அச்சிறுமியை வற்புறுத்தியதுடன், அதே நேரத்தில் தனது கைபேசி மூலம் உணவும் ஆர்டர் செய்துள்ளார்.
சிறுமி பெற்றோரிடம் பேசிய இடத்தின் சிக்னலும், உணவு ஆர்டர் செய்யப்பட்ட முகவரியும் ஒரே இடமாகக் காட்டுவதை செல்போன் கண்காணிப்பு மூலம் காவல்துறையினர் துல்லியமாகக் கண்டறிந்தனர். இதன் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், அச்சிறுமியின் உயிரைக் காப்பாற்றி அவரை மீட்டதுடன், குற்றவாளியான ஆகாஷைக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
