“நாங்க இருக்குறதே வாடகை வீடுதான்”… “2 கோடி ரூபாய்க்கு நிலம் வாங்கினா சென்னையில் வாங்குவோம்…. 100 கோடி நில மோசடி வழக்கில் பொங்கிய அமைச்சர் ரமேஷ்….!

By Nanthini on ஆடி 30, 2026

Spread the love

பழனி நில மோசடி வழக்கு விசாரணையில் எவ்வித பாரபட்சமும் காட்டப்படாது என்றும், இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நமது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் ரமேஷ் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் உறுதியளித்துள்ளார். இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி தாம் தான் முதலமைச்சரிடம் பரிந்துரைத்ததாகக் குறிப்பிட்ட அவர், அதனடிப்படையில் உடனடியாக விசாரணை அதிகாரி மாற்றப்பட்டு, முறைகேட்டில் தொடர்புடைய பதிவுத்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதியப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர், 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை தனது உறவினர்கள் 2 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக அதிமுக ஐடி விங் பரப்பி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்று கொதித்தெழுந்தார். தனது குடும்பத்தில் உள்ள எவரிடமும் 2 கோடி ரூபாய் அளவிற்குக் கூட பணம் கிடையாது என்றும், தாங்கள் இன்றும் வாடகை வீட்டில்தான் வசித்து வருவதாகவும் குறிப்பிட்ட அவர், சொத்து வாங்குவதாக இருந்தால் சென்னையில் வாங்காமல் ஏன் பழனியில் வாங்கப்போகிறோம் எனக் கேள்வி எழுப்பினார். வேண்டுமென்றே தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கில் இதுபோன்ற வீண் வதந்திகள் பரப்பப்படுவதாகச் சாடினார்.

   

மேலும், ஸ்ரீரங்கம் கோவில் கோபுர சீரமைப்புப் பணியின் போது காலணி அணிந்து சென்றது குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கும் அவர் விளக்கம் அளித்தார். நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் அந்தப் பணியின் காரணமாகச் சாலையில் முட்களும், கூர்மையான ஆணிகளும் சிதறிக் கிடந்ததாகத் தெரிவித்த அவர், அங்குப் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு ஆலோசனையின் பேரிலேயே தாம் காலணி அணிந்து செல்ல நேர்ந்ததாகக் கூறினார். அங்கே பணிபுரியும் தொழிலாளர்களும் பாதுகாப்பு நடவடிக்கையாகவே காலணிகளைப் பயன்படுத்துவதைச் சுட்டிக்காட்டிய அவர், பகுத்தறிவு அற்றவர்களே இது போன்ற விஷயங்களைச் சர்ச்சையாக்கி ஆதாயம் தேட முயல்கிறார்கள் என்று கூறி அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.