திருப்பதி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ‘குரூப் தியேட்டர்’ அருகே உள்ள பி.ஜி.ஆர் விடுதியில், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உடல் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தைச் சேர்ந்த தன்ராஜ் மற்றும் அவரது மனைவி பிளாஸ்டிக் பொருட்களை விற்று ஜீவனம் நடத்தி வந்த நிலையில், கடந்த 21-ஆம் தேதி இத்தம்பதியினர் இந்த விடுதியில் அறெயெடுத்துத் தங்கியுள்ளனர். வழக்கம்போல் இருவரும் பகலில் வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் திரும்புவது வழக்கம் என்றாலும், கடந்த 27-ஆம் தேதி மாலை திரும்பிய இவர்களில் தன்ராஜ் மட்டும் கடந்த 28-ஆம் தேதி காலையில் தனியாக வெளியேறியது விடுதி ஊழியர்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
https://twitter.com/Telugufeedsite/status/2082355374712381914/photo/1
இதனைத் தொடர்ந்து, வாடகை வசூலிப்பதற்காக 28-ஆம் தேதி இரவு ஊழியர்கள் அந்த அறைக்குச் சென்றபோது கடுமையான துர்நாற்றம் வீசியதால் அதிர்ச்சியடைந்த விடுதி நிர்வாகம் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தது. விரைந்து வந்த திருப்பதி கிழக்குக் காவல்துறையினர் சிதைக்கப்பட்ட நிலையில் கிடந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, தலைமறைவாகியுள்ள கணவன் தன்ராஜைக் தீவிரமாகத் தேடி வருவதுடன் இக்கொலைக்கான காரணம் குறித்துப் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
