சென்னை புனித ஜார்ஜ் கோட்டை முதன்மை வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழக முதலமைச்சர் அலுவலகம், நிர்வாக வசதி மற்றும் இட நெருக்கடி காரணமாக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதலமைச்சரின் முதன்மை அறைகள், செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்களின் அலுவலகங்கள் அனைத்தும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கப்படும் வகையில் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த மாற்றத்தை முன்னிட்டு, 10-வது தளத்தில் இயங்கிவந்த செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் பல்வேறு பிரிவுகள் சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்திற்கும், சுற்றுலாத்துறையின் எழுதுபொருட்கள் அறை அத்துறை அமைந்துள்ள 9-வது தளத்திற்கும் தற்காலிகமாக மாற்றப்படுகின்றன. ஏற்கனவே இதுகுறித்த செய்திகள் வெளியான நிலையில், தற்சமயம் அரசு பிறப்பித்துள்ள அதிகாரப்பூர்வ உத்தரவின் மூலம் அலுவலக இடமாற்றப் பணிகளைப் பொதுப்பணித்துறை முடுக்கிவிட்டுள்ளது.
