நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காவிரி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கைக் கடுமையாக விமர்சித்துள்ளார். குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-இல் திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை நீர் இன்றி திறக்கப்படாததாலும், சம்பா சாகுபடிக்கும் ஒரு சொட்டு நீர் தர முடியாது என கர்நாடக அரசு அறிவித்ததாலும் டெல்டா விவசாயிகள் வேதனையில் தவிக்கின்றனர். இந்நிலையில், அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல், அமைச்சர்கள் ‘ஜனநாயகன்’ திரைப்படம் பார்த்து கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது என்று அவர் சாடியுள்ளார்.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரசு அரசுடன் கூட்டணியில் இருந்தும், தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரைப் பெற்றுத்தரவோ அல்லது அம்மாநில அரசின் அடாவடிக்குக் கண்டனம் தெரிவிக்கவோ தவெக அரசிற்குத் துணிவில்லை என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், காவிரி நீர் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க ஆகஸ்ட் முதல் வாரம் வரை காத்திருப்பதாக அமைச்சர் நிர்மல்குமார் கூறியது டெல்டா விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், பேச்சுவார்த்தையோ சட்டப் போராட்டமோ எதுவாக இருந்தாலும் அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி நீர் கிடைக்காமல் குறுவை மற்றும் சம்பா சாகுபடி பொய்த்துப்போனால் தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஏற்கனவே அரிசி விலை அதிகரித்து வரும் சூழலில், இந்நிலை தொடர்ந்தால் அரிசி விலை பன்மடங்கு உயர்ந்து நியாயவிலைக் கடைகளிலும் தட்டுப்பாடு ஏற்படும் எனக் எச்சரித்துள்ளார். எனவே, ஆகஸ்ட் மாதம் வரை இழுத்தடிக்காமல், தமிழ்நாடு அரசு கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரைப் பெற உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடங்கி விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
