ஒரு நாள் திருமண விழாவுக்காக ரூ.20 லட்சம் வரை பெரும்தொகையை செலவிடுவது சரியான நிதி முடிவா என்ற கேள்வியை பெங்களூருவைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் மீனல் கோயல் எழுப்பியது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவகக் கட்டணம், மண்டபம், அலங்காரம், புகைப்படம் எனப் பல வழிகளில் செய்யப்படும் இந்தச் செலவுகள் ஒரே நாளில் முடிந்துவிடும் என்றாலும், அதற்காகக் கடன் வாங்குவதோ அல்லது சேமிப்பை முழுமையாகப் பயன்படுத்துவதோ குடும்பத்தின் எதிர்கால நிதிநிலையைப் பல ஆண்டுகளுக்குப் பாதிக்கும் என்று அவர் எச்சரிக்கிறார்.
இந்தத் தொகையைக் வீட்டின் முன்பணம், அவசரகால நிதி, நீண்டகால முதலீடுகள் அல்லது குழந்தைகளின் கல்வி போன்ற எதிர்காலத் தேவைகளுக்குப் பயன்படுத்துவது குடும்பத்திற்கு அதிக நிதிப் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் தரும் என்பது அவரது கருத்தாகும். இவரைப் போன்ற நிதி நிபுணர்களின் கருத்துப்படி, பிறரைக் கவர்வதற்காக வரம்பிற்கு மீறிச் செலவு செய்வதைத் தவிர்த்து, ஆடம்பரத்தைக் குறைத்துக் கட்டுப்படியான செலவில் திருமணத்தை நடத்துவதே புத்திசாலித்தனமான அணுகுமுறையாகும்.
அதேவேளையில், திருமணம் என்பது வெறும் நிதிச் சார்ந்த விஷயம் மட்டுமல்ல; அது பண்பாடு, குடும்ப மரபு மற்றும் வாழ்நாளின் மறக்க முடியாத நினைவுகளோடு தொடர்புடையது என்பதால் ஒவ்வொருவரின் நிதி நிலைக்கு ஏற்பவே இதற்கான செலவுகள் அமைகின்றன. எனவே, கலாச்சார விருப்பங்களுக்கும் எதிர்கால நிதிப் பாதுகாப்பிற்கும் இடையே சரியான சமநிலையைப் பேணி, சொந்த வருமானம் மற்றும் சேமிப்பிற்குள் திட்டமிட்டு முடிவெடுப்பதே சிறந்த வழிகாட்டலாகும்.
