தமிழ்நாடு அரசின் மிக முக்கியமான துறைகளில் ஒன்றான இந்து சமய அறநிலையத்துறை, மாநிலத்திலுள்ள சுமார் 44,000-க்கும் மேற்பட்ட இந்து மற்றும் சமணக் கோவில்கள், மடங்கள் மற்றும் அறக்கட்டளைகளை நிர்வகித்து வருகிறது. இத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சொத்துக்களைப் பாதுகாக்கவும், நிர்வாகத்தைச் சீராக நடத்தவும் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சட்டப்பிரிவு 46(1)-ன் கீழ் வரும் 673 திருக்கோயில்கள் மற்றும் 46(2)-ன் கீழ் வரும் 84 திருக்கோயில்கள் என மொத்தம் 757 திருக்கோயில்களுக்குப் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களை நியமிக்கத் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தகுதிகள், கோவில் விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் துறையின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (www.hrce.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளன.
விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை இணைய வழியிலோ அல்லது பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்தோ, உரிய ஆவணங்களுடன் ஆகஸ்ட் 12-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சம்பந்தப்பட்ட இணை ஆணையர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது விரைவஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். ஏற்கனவே சட்டப்பிரிவு 46(3)-ன் கீழ் உள்ள 220 கோவில்கள், நிர்வாகத்திட்டம் உள்ள 35 கோவில்கள் மற்றும் 14 மாவட்டக் குழு உறுப்பினர்களுக்கான நியமன நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
