தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாகக் கைது செய்யப்பட்ட அருணாச்சலம் (26) என்ற இளைஞர், சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். காவல்துறையினர் விசாரணையின் போது தங்களைக் கொடூரமாகத் தாக்கியதாலேயே அவர் உயிரிழந்ததாகக் கூறி, அருணாச்சலத்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வீதிக்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சிகிச்சையில் இருந்தபோது காவலர்கள் தன்னைத் தாக்கியதாக அருணாச்சலம் பேசிய வீடியோவும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும், இந்த மரணம் காவல்நிலையத் தாக்குதலால் நிகழவில்லை எனக் காவல் துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அருணாச்சலத்தைக் கைது செய்தபோது எந்தக் காயங்களும் இல்லை என்பதைக் காட்டும் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ள காவல்துறையினர், அவர் உடல்நலக்குறைவால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காவல் அதிகாரிகள் தொடர்ந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
