ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ண குமார் என்ற 40 வயது நபர், மது அருந்துவதற்குப் பணம் தருமாறு தனது மனைவி சுலோச்சனாவிடம் கேட்டுள்ளார். மனைவி பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர், மனைவியை அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் சடலத்தின் கைகளைக் கட்டி, வீட்டிலிருந்த பெரிய இரும்புப் பெட்டிக்குள் போட்டுப் பூட்டி மறைத்து வைத்துள்ளார். தாய் எங்கே எனக் கேட்ட 16 வயது மகனிடம், அவர் வெளியே சென்றிருப்பதாகக் கூறி உண்மையைத் மறைத்துள்ளார்.
கொலை நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகு பெட்டியிலிருந்து துர்நாற்றம் வீசியதால், பயந்துபோன அந்த நபர் தனது நண்பரிடம் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோட முயன்ற நபரைக் கைது செய்த காவல்துறை, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
