நிலத் தகராறில் ஆத்திரம்… “சரக்கு பார்ட்டியில் முடிந்த கொடூரம்”… ‘நான் கொன்னுட்டேன்…’ ஸ்டேஷனில் கதறிய நபர்… சடலத்தை தேடி அலைந்த போலிஸ்…!

By Visaka on ஆடி 22, 2026

Spread the love

நிலத் தகராறு காரணமாக பக்கத்து வீட்டுக்காரரை மதுக் குடிக்க அழைத்துச் சென்று கழுத்தை அறுத்துக் கொலை செய்த நபர், இரவு முழுவதும் வீட்டில் நிம்மதியாக தூங்கிவிட்டு மறுநாள் காலையில் காவல் நிலையத்தில் தானாகவே சரணடைந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீஞ்சூர் புதுப்பேடு பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த சேட்ராஜ் மற்றும் ராமலிங்கம் இடையே நீண்ட நாட்களாக நிலம் தொடர்பாக மோதல் நிலவி வந்துள்ளது. இந்நிலையில், பிரச்சனையை சமரசமாக முடித்துக் கொள்ளலாம் எனக்கூறி ராமலிங்கத்தை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள ஏரிக்கரைக்கு சேட்ராஜ் சென்றுள்ளார்.

அங்கு இருவரும் மது அருந்திய நிலையில், திட்டமிட்டபடி சேட்ராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராமலிங்கத்தின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் தீவிர ரத்தப் போக்கு ஏற்பட்டு ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறந்துவிட்டதை உறுதி செய்த பிறகு, கொலைக்கு பயன்படுத்திய கத்தியை அங்கேயே வீசிவிட்டு வீட்டிற்குத் திரும்பிய சேட்ராஜ், இரவு முழுவதும் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார். தொடர்ந்து மறுநாள் காலையில் மீஞ்சூரில் இருந்து பேருந்து மூலம் திருவொற்றியூர் சென்று சில மணி நேரம் சுற்றித் திரிந்துள்ளார்.

   

பின்னர் மனம் மாறிய சேட்ராஜ், நேரடியாக திருவொற்றியூர் காவல் நிலையத்திற்குச் சென்று “நான் ஒருவரைக் கொன்று விட்டேன், என்னை கைது செய்யுங்கள்” எனக் கூறி சரணடைந்தார். உடனடியாக மீஞ்சூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சடலத்தைக் கைப்பற்ற ஏரிக்கரை பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. முதலில் உடலைக் கண்டறிய முடியாததால், சேட்ராஜையே நேரில் அழைத்துச் சென்று இடத்தை அடையாளம் காண வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.