ஹைதராபத் பழைய நகரப் பகுதியில் உள்ள சைதாபாத் ‘சக்சஸ்’ என்ற தனியார் பள்ளியில் இந்து மாணவர்களுக்கு இஸ்லாமிய மதப் போதனைகள் வழங்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் இந்து மாணவர்களின் டைரியில், இஸ்லாமிய மத வழிபாடான ‘கல்மா’ மற்றும் ‘சுரா பதேஹா’ ஆகியவற்றை ஓதி வருமாறு வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டிருந்ததை பெற்றோர்கள் கண்டறிந்தனர். இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் நேரில் சென்று கேள்வி எழுப்பியபோது, தங்கள் பள்ளியில் இது கட்டாயமான ஒன்று என்று நிர்வாகத் தரப்பில் பதிலளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தால் அதிருப்தியடைந்த பெற்றோர்கள், பாஜகவினருடன் இணைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், பள்ளிக்கு எதிராக முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக பாஜகவினர் எச்சரித்ததால், அப்பகுதியில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பள்ளிக்குச் செல்லும் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து விளக்கம் அளித்த பள்ளி நிர்வாகம், மாணவர்களின் டைரியில் கல்மா எழுதச் சொன்ன ஆசிரியரை உடனடியாகப் பணியில் இருந்து நீக்கிவிட்டதாகவும், தங்களது பள்ளியில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை என்றும் தெரிவித்துள்ளது.
இவ்விவகாரம் குறித்து கோஷாமஹால் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் உள்ள சில பள்ளிகள் திட்டமிட்டு இந்து மாணவர்களைக் குறிவைத்து, சிறு வயதிலேயே அவர்களை இஸ்லாமிய மதத்தின் பக்கம் திருப்ப முயல்வதாகக் குற்றம் சாட்டிய அவர், இதுபோன்ற பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தடை விதித்து அவர்களைச் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், இச்சம்பவம் குறித்து தெலுங்கானாவின் முதல்வர் ரேவந்த் ரெட்டி உரிய ஆய்வு மேற்கொண்டு, தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
