உலகில் பணத்தையோ, நகையையோ திருடும் பல விசித்திரமான திருடர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், பெங்களூருவில் அரங்கேறியுள்ள ஒரு விசித்திரமான திருட்டுச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அங்குள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் பெண்கள் துவைத்துக் காயப்போட்ட உள்ளாடைகள் அடிக்கடி காணாமல் போவதும், மீண்டும் இரண்டு நாட்களுக்குப் பிறகு அதே இடத்திலேயே வந்து சேருவதுமாக இருந்துள்ளது. இதனால் பெரும் சந்தேகமடைந்த அப்பகுதி பெண்கள், இந்த விசித்திர மர்மத்தைத் துலக்க தங்கள் வீடுகளின் அருகே சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
அப்போதுதான், அந்தப் பகுதியைச் சேர்ந்த சதாம் (23) என்ற இளைஞன் பெண்களின் உள்ளாடைகளைத் திருடி, அதைத் தானே அணிந்து கொண்டு ஆபாச சைகைகளில் ஈடுபட்டு வந்த அதிர்ச்சி உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. சிசிடிவி காட்சிகளில் அவனது இந்த வக்கிரமான செயல் அப்படியே பதிவாகியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள், உடனடியாக அந்த வீடியோ ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில், பெண்களிடம் வக்கிரமாக நடந்து கொண்டு மனநோயாளி போல் செயல்பட்ட சதாமைப் போலீசார் தற்போது கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
