“அமைச்சர் பதவி வேணுமா…? ரூ 150 கோடி லஞ்சம்…?” கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில்… வெடித்த ‘பணக் கோட்டா’ குண்டு… பற்றி எரியும் அரசியல் களம்…!!

By Swetha on ஆடி 15, 2026

Spread the love

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், அமைச்சரவையில் காலியாக உள்ள 20 இடங்களை நிரப்புவதற்கான விரிவாக்கப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக நடப்பு முதல்வர் டி.கே. சிவக்குமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களைச் சந்திக்க டெல்லி செல்ல உள்ளனர். இந்த நிலையில், கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களிடம் அமைச்சர் பதவியைப் பெறுவதற்காக ரூ. 100 கோடி முதல் ரூ. 150 கோடி வரை காங்கிரஸ் மேலிடம் லஞ்சம் வசூலிப்பதாக பாஜக அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான ஆர். அசோக் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போதைய அமைச்சர்கள் ‘போராட்டக் கோட்டா’ அடிப்படையில் பதவி பெற்றுள்ளதாகவும், இனி வரவிருக்கும் புதிய அமைச்சர்கள் ‘பணக் கோட்டா’ அடிப்படையில் மட்டுமே வர முடியும் என்றும் சாடினார். எனினும், இந்த விவகாரத்தில் லஞ்சம் பெறப்படுவதற்கான எந்தவொரு அதிகாரப்பூர்வ ஆதாரத்தையும் பாஜக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

   

மறுபுறம், பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வர் பேசுகையில், தங்களது சொந்த அரசியல் கலாசாரத்தை காங்கிரஸுடன் ஒப்பிட்டு பாஜகவினர் பேசி வருவதாகப் பதிலடி கொடுத்துள்ளார். மேலும், ஆகஸ்ட் 6-ம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், கட்சி மேலிடத்தின் ஆலோசனையின்படி தகுதியின் அடிப்படையில் விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் முறைப்படி நடைபெறும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.