“நான் திவ்யா பேசறேன்…” வாட்ஸ்அப்பில் வந்த குறுஞ்செய்தி…. ரூ.21 கோடியை முதலீடு செய்த ஆடிட்டர்…. ஒரே இரவில் காத்திருந்த பேரதிர்ச்சி…!!

By Devi Ramu on ஆடி 15, 2026

Spread the love

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான ஆடிட்டர் அசோக் விஜயவர்கியா என்பவருக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அடையாளம் தெரியாத வாட்ஸ்அப் எண் ஒன்றிலிருந்து முதலீட்டு ஆலோசனைகள் வழங்குவதாகக் கூறி குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் பேசிய திவ்யா என்ற பெண் , கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசைவார்த்தை கூறி, போலியான இணைய முகவரி மூலம் கணக்கைத் தொடங்க வைத்துள்ளது. தொடக்கத்தில் அவர் செய்த சிறிய முதலீட்டிற்கு லாபத் தொகையாக ரூ.1.88 லட்சத்தை அவரது வங்கிக் கணக்கிற்கு நேடியாக அனுப்பி நம்பகத்தன்மையை ஏற்படுத்தியுள்ளனர். இதனை முழுமையாக நம்பிய ஆடிட்டர், தன் சொந்தப் பணம் மட்டுமின்றித் தனது தொழில் கூட்டாளிகள் பலரது பணத்தையும் சேர்த்து ரூ.21 கோடிக்கும் மேல் அத்தளத்தில் முதலீடு செய்துள்ளார்.

அவரது கணக்கில் லாபத் தொகை ரூ.33 கோடிக்கும் அதிகமாகக் காட்டியபோது, அதனை எடுக்க முயன்ற அவரது கணக்கை மோசடி கும்பல் முடக்கியதுடன், வரியாகக் கூடுதல் பணம் கேட்டு மிரட்டியுள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், உடனடியாகத் தேசிய சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், இத்தொகை முழுவதும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான போலி வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுப் பதுக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. சிக்கலான பல அடுக்கு பரிவர்த்தனைகள் மூலம் மாற்றப்பட்ட பணத்தில் வெறும் ரூ.2 கோடியை மட்டுமே போலீசாரால் முடக்க முடிந்த நிலையில், மீதிப் பணத்தையும் குற்றவாளிகளையும் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.