“நோபல் பரிசு நக்கல்… அப்புறம் டோட்டல் சரண்டர்…! திருமாவளவனிடம் வைகோ ‘பல்டி’ அடித்த… பின்னணியின் காரணம் என்ன..?!”

By Swetha on ஆடி 9, 2026

Spread the love

திமுக கூட்டணியில் நீண்ட காலமாக அங்கம் வகித்து வந்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் , கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அண்மையில் தவெக கட்சிக்கு ஆதரவளித்து அக்கூட்டணியில் இருந்து வெளியேறின. மேலும் காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தவெகவின் புதிய அமைச்சரவையிலும் இணைந்துள்ளன. இந்த அதிரடி அரசியல் மாற்றங்களுக்கு மத்தியிலும், “தவெக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தாலும் நாங்கள் இன்னும் திமுகவுடன் நட்புடன்தான் இருக்கிறோம்; நினைத்தால் எந்த நேரத்திலும் தவெக அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம்” என விசிக தலைவர் திருமாவளவன் தொடர்ந்து கூறி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.

திருமாவளவனின் இந்த இரட்டை நிலைப்பாடு குறித்த கருத்து பற்றி செய்தியாளர்கள் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு வைகோ, “இது நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டிய கருத்து” என்று மிகக் காட்டமாக நக்கலடித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசிய திருமாவளவன், “எனக்கு நோபல் பரிசை பரிந்துரை செய்ததற்காக வைகோவுக்கு நன்றி, உண்மையிலேயே அந்தப் பரிசு கிடைத்தால் அவருக்குத்தான் முதலில் நன்றி கூறுவேன்” எனத் தன் பாணியில் சாதுரியமாகப் பதில் அளித்தார்.

   

இரு தலைவர்களுக்கும் இடையேயான இந்த வார்த்தைப்போர் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வைகோ தற்போது இதற்கு சுமுகமான விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார். விசிக தலைவர் திருமாவளவனை புண்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், “நான் பேசிய வார்த்தையால் அவர் மனம் புண்பட்டிருந்தால் என் வார்த்தைகளைத் திரும்ப பெற்றுக் கொள்கிறேன்; எனக்கு அவர் மீது துளியளவு கூட கோபமோ, வருத்தமோ கிடையாது” எனப் பெருந்தன்மையுடன் கூறி இந்த அரசியல் விவாதத்திற்கு தற்காலிகமாகத் திரை போட்டுள்ளார்.