பெற்றோர்களே உஷார்… சென்னையில் பரபரப்பை கிளப்பிய ‘ஆல்கஹால்’ ஐஸ்கிரீம்… உணவு பாதுகாப்புத் துறை அதிரடி ஆய்வு…!

By SATHISH R on ஆடி 7, 2026

Spread the love

சென்னையின் முக்கியப் பகுதியான மேற்கு அண்ணா நகரில் உள்ள ‘ஐ சாண்டி நேச்சுரல்’ என்ற ஐஸ்கிரீம் கடையில் ஒயின், வோட்கா, விஸ்கி மற்றும் பிராந்தி போன்ற மதுபானங்களின் சுவை மற்றும் மணத்துடன் கூடிய ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைக் கவரும் வகையில் இணையதளங்களில் வெளியான இதன் விளம்பரங்கள் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதை அடுத்து, இது குறித்து உணவு பாதுகாப்புத் துறைக்குத் தொடர் புகார்கள் அனுப்பப்பட்டன.

இப்புகார்களின் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட கடையில் அதிரடி சோதனை நடத்தினர். இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “முதற்கட்ட ஆய்வில் ஐஸ்கிரீமில் நேரடியாக ஆல்கஹால் கலக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும், மதுபானத்தின் சுவை மற்றும் மணத்தை உருவாக்கக்கூடிய எசன்ஸ் மற்றும் ஃபிளேவர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும்” தெரிவித்துள்ளனர். இருப்பினும், சந்தேகத்தின் பேரில் இரண்டு ஐஸ்கிரீம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கடமையின் உரிமையாளர் சந்தோஷ், தங்களது தயாரிப்புகளில் ஆல்கஹால் கலப்பு இல்லை என்றும், விளம்பர உத்தியால் தவறான புரிதல் ஏற்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

   

இருப்பினும், இத்தகைய விற்பனை முறை எதிர்காலத் தலைமுறையினரைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் என சமூக ஆர்வலர்களும் மருத்துவர்களும் எச்சரிக்கின்றனர். இது குறித்து அரசு பொதுநல மருத்துவர் பரூக் அப்துல்லா கூறுகையில், ஐஸ்கிரீம் வடிவில் மதுபானத்தின் சுவையை அறியும் குழந்தைகள், பிற்காலத்தில் நிஜ மதுபானத்தின் ருசியை அறிய முற்படுவார்கள் என்றும், இது காலப்போக்கில் அவர்களைப் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கும் ஆபத்து உள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார். எனவே, தமிழகத்தில் போதைக் கலாச்சாரம் பெருகி வரும் வேளையில், குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கில் அரசு இத்தகைய விவகாரங்களில் கடுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.