பெரும்பான்மை வயது சிறுவர்கள் தங்களது வீட்டுப்பாடங்களிலும் தேர்விலும் பிசியாக இருக்கும் வேளையில், 14 வயதே ஆன ஜெயினம் என்ற சிறுவன் துபாயின் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் தனது சொந்த செயற்கை நுண்ணறிவுஸ்டார்ட்-அப் நிறுவனத்தைத் தொடங்கி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். உலகின் மிக உயரமான இக்கட்டிடத்தின் 141-வது மாடியில் ‘மெங்கோ என்ஜின்’ என்ற நிறுவனத்தை அமைத்து, துபாயின் மிக இள வயது ஏ.ஐ நிறுவனர்களில் ஒருவராக இவர் உருவெடுத்துள்ளார். வணிக நிறுவனங்களின் மார்க்கெட்டிங், வாடிக்கையாளர் தொடர்பு மற்றும் உள்ளடக்க உருவாக்கம் போன்ற பணிகளைத் தானியங்கி முறையில் எளிதாக்க இந்த நிறுவனம் உதவுகிறது. தனது 6-வது வயதில் தந்தை அழைத்துச் சென்ற ஒரு பிசினஸ் மீட்டிங் மூலம் தொழில்முனைவோர் ஆகும் ஆர்வம் பெற்ற ஜெயினம், தனது 13-வது வயதில் பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தை வெறும் 105 நாட்களில் படித்து முடித்துவிட்டு, தனது முழு கவனத்தையும் ஸ்டார்ட்-அப் நோக்கிய தேடலில் திருப்பியுள்ளார்.
எந்தவொரு முறையான வகுப்புகளுக்கும் செல்லாமல், பொதுத் தளங்களில் உள்ள வீடியோக்கள் மற்றும் சுய முயற்சி மூலமாகவே ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தை ஜெயினம் கற்றறிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வகுப்பறைக் கல்வியைப் போலவே, நடைமுறை வழிக் கற்றலும் சம அளவில் மதிப்புமிக்கது என்பதை ஆழமாக நம்பும் இவர், ஏற்கனவே 2 காப்புரிமைகளைப் பதிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, TEDx மேடையில் உரையாற்றியதுடன், ஒரு புத்தகமும் எழுதியுள்ளார்; இவருடைய யூடியூப் சேனல் 1.45 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டு சாதனை படைத்து வருகிறது. அசாதாரணமான ஆழ்ந்த கற்றல் முறையும், கூர்மையான புத்திசாலித்தனமும் கொண்ட இந்த இளம் சாதனையாளரின் பயணம், இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது என்பதில் ஐயமில்லை.
