சுடுதண்ணீர், பழுக்கக் காய்ச்சிய கரண்டி… “ரயில்வே தண்டவாளத்தில் போ விழுந்து செத்துடு”… ஈரோட்டில் பெத்த மகளுக்கே நடந்த கொடூரம்… நள்ளிரவில் அம்பலமான பயங்கரம்…!

By Nanthini on ஆடி 6, 2026

Spread the love

ஈரோடு மாவட்டம், வெண்டிபாளையம் சீனிவாசராவ் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு, முதல் மனைவி குமுதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தாகி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு 11 வயது மற்றும் 7 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மணிகண்டன் அதே பகுதியைச் சேர்ந்த கயல்விழி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, முதல் மனைவிக்கு பிறந்த 11 வயது சிறுமி மட்டும் தந்தை மற்றும் சித்தி கயல்விழியுடன் வசித்து வந்த நிலையில், அந்த குழந்தைக்கு நரக வேதனை காத்துக்கொண்டிருந்தது.

சிறுமி என்றும் பாராமல் சித்தி கயல்விழி தொடர்ந்து அந்த குழந்தையை மிகக் கொடூரமாக சித்திரவதை செய்து வந்துள்ளார். சுடுநீரை உடலில் ஊற்றுவது, கரண்டியைப் பழுக்கக் காய்ச்சி உடலில் சூடு வைப்பது, அடித்துத் துன்புறுத்துவது என கயல்விழியின் அத்துமீறல்கள் தொடர்ந்தன. அதோடு நின்றுவிடாமல், “ரயில்வே தண்டவாளத்தில் போய் விழுந்து செத்துவிடு” என்று அந்த பிஞ்சு மனதைக் காயப்படுத்தி மிரட்டியும் வந்துள்ளார். கயல்விழி குழந்தையை அடித்துத் துன்புறுத்தும் போதெல்லாம் அந்த சிறுமி அலறித் துடித்த சத்தம் அக்கம் பக்கத்தினருக்குத் தொடர்ச்சியாகக் கேட்டு வந்துள்ளது.

   

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, குழந்தை உடலில் இருந்த காயங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கயல்விழியிடம் தட்டிக்கேட்டபோது, “இது எங்கள் குடும்ப பிரச்சினை, நான் அடிப்பேன், திட்டுவேன், என்ன வேண்டுமானாலும் செய்வேன். உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போங்கள்” என்று அலட்சியமாகவும் திமிராகவும் பதிலளித்துள்ளார். இதனால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்று அஞ்சிய பொதுமக்கள், உடனடியாக “Childline 1098”-க்கு தகவல் கொடுத்து குழந்தையைக் காப்பாற்ற முன்வந்தனர்.

   

தகவலின் பேரில் விரைந்து வந்த குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சிறுமியை மீட்டு, மொடக்குறிச்சி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றம் என்பதால், இந்த வழக்கு ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு நடைபெற்ற தீவிர விசாரணையில், சிறுமி அளித்த வாக்குமூலம் மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆதாரங்களின் அடிப்படையில் சித்தி கயல்விழி மீது குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.