மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ குடியிருப்பு கட்டிடத்தின் இரண்டாவது பிரிவில் வெள்ளிக்கிழமை அன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தினால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்ததால், கட்டிடத்திற்குள் இருந்த மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். தீயின் வீரியம் மற்றும் புகையின் தாக்கத்தால் அதிர்ச்சியடைந்த சில குடியிருப்பாளர்கள், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்பே கட்டிடத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகளில் இருந்து கீழே குதித்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு, உள்ளே சிக்கியிருந்த பலரை பத்திரமாக மீட்டனர்.
தீயணைப்பு வீரர்களின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, தற்போது தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. டி.என். நகர் போலீஸார் மற்றும் அதானி மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளுக்கு உதவினர். இந்த விபத்தில் ஏற்பட்ட காயங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்; மேலும், கட்டிடத்திலிருந்து கீழே குதித்தவர்களின் தற்போதைய நிலை குறித்தும் அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்
