மத்தியப் பிரதேச மாநிலம் சியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராம அரசு ஆரம்பப் பள்ளியில், ஆசிரியை ஒருவர் மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியேற்றி ஆக்ரோஷமாக கத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது குழந்தையை பள்ளியில் சேர்க்கச் சென்ற பெற்றோர் ஒருவர், வகுப்பறையில் ஆசிரியர் யாரும் இல்லாமல் மாணவர்கள் தனியாக அமர்ந்திருப்பதைக் கண்டுள்ளார். அப்போது அங்குள்ள ஆசிரியர்கள் பாடம் நடத்தாமல், வெள்ளரிக்காய் சாப்பிட்டுக் கொண்டு “பார்ட்டி” செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். இதனைத் தட்டிக்கேட்டு அவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுக்கத் தொடங்கியதால் ஆத்திரமடைந்த ஆசிரியை, “இனி இவர்களை நான் படிக்க வைக்க மாட்டேன், பள்ளிக்கு அழைத்து வராதீர்கள்” என்று கூறி அந்த நபரின் குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளியுள்ளார்.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை அந்தப் பெற்றோர் வீடியோவாகப் பதிவு செய்தபோது, ஆசிரியை குழந்தைகளை வெளியேற்றுவதும், பின்னர் நிலைமையைச் சமாளிக்க திடீரென ஆங்கிலம் கற்பிப்பது போல் நடிப்பவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கல்வித் துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளனர். வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை முடிவில் ஆசிரியை மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
