திருச்சி கிழக்கு தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடப் போவதாக எழுந்த வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்திருந்த நிலையில், தற்போது சேலம் ஓமலூரில் நடைபெற்ற விசிக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. திருச்சி கிழக்கில் திருமாவளவன் போட்டியிட வேண்டும் என்றும், அவர் துணை முதலமைச்சராக வேண்டும் என்றும் அக்கட்சியினர் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். “எனக்கு துணை முதல்வர் பதவியில் ஆசையில்லை, திருச்சி கிழக்கில் போட்டியிடப் போவதில்லை” என்று திருமாவளவன் ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருந்த சூழலில், இந்தத் தீர்மானம் பல்வேறு விவாதங்களை உசுப்பிவிட்டுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் அண்மையில் ஏற்பட்ட அதிரடி மாற்றமாக, திமுக கூட்டணியில் இருந்த விசிக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி அமைந்த பிறகு அதற்கு ஆதரவு தெரிவித்தது. இதற்குப் பிரதிபலனாக விசிகவுக்கு அமைச்சரவையிலும் இடம் கிடைத்தது. எனினும், வெறும் வெளி ஆதரவோடு நிற்காமல், விசிக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் தவெக தலைமையிலான கூட்டணியில் முழுமையாக அங்கமாக வேண்டும் என்பதே முதல்வர் விஜய்யின் விருப்பமாக உள்ளது. இதற்காக திமுக கூட்டணியை விட்டு விசிக முற்றிலும் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில், விசிக தரப்பில் சில முக்கிய கோரிக்கைகள் (டிமாண்டுகள்) வைக்கப்பட்டதாகப் பேச்சுகள் அடிபட்டன. ஆனால், அப்படியொரு டிமாண்ட் எதையும் தாங்கள் வைக்கவில்லை என திருமாவளவன் மறுத்திருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் விஜய் தலைமையில் நடந்த தோழமைக் கட்சிகளின் கூட்டத்தில் திருமாவளவன் பங்கேற்ற கையோடு, ஓமலூர் கூட்டத்தில் இந்த அதிரடித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது, திமுக கூட்டணியில் இருந்து விசிக முழுமையாக வெளியேறி, தவெக கூட்டணியில் ஐக்கியமாவதற்கான கிரீன் சிக்னலா என்ற கேள்வியைக் கிளப்பியுள்ளது. மேலும், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டபோது, தொடக்கத்தில் எதிர்ப்பு கிளம்பினாலும், திமுகவின் அடுத்தடுத்த உட்கட்சி கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டே அந்தப் பதவி உறுதி செய்யப்பட்டது. அதே பாணியைத்தான் தற்போது விசிகவும் கையில் எடுத்து, திருமாவளவனை துணை முதல்வர் நாற்காலியில் அமர வைக்கக் காய நகர்த்துகிறதோ என்ற எண்ணம் அரசியல் நோக்கர்களிடையே வலுத்துள்ளது.
அரசியல் விமர்சகர்களின் கூற்றுப்படி, திருமாவளவனின் கடந்த கால பேச்சுகளும் அவரது செயல்களும் பல நேரங்களில் முரணாகவே இருந்துள்ளன. உதாரணமாக, தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில் இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாட்டையே தாங்களும் தொடருவோம் என்று திருமாவளவன் கூறியிருந்தார். ஆனால், இறுதியில் இடதுசாரிகள் அமைச்சரவையில் பங்கெடுக்காத நிலையில், விசிக தவெக அமைச்சரவையில் இணைந்தது. இதே லாஜிக் தான் தற்போதும் பேசப்படுகிறது; நான் போட்டியிட மாட்டேன், பதவி ஆசையில்லை என்று திருமாவளவன் வெளியில் சொன்னாலும், கட்சியின் தீர்மானத்திற்கும் தொண்டர்களின் விருப்பத்திற்கும் மதிப்பளித்து திருச்சி கிழக்கில் போட்டியிட்டு, துணை முதல்வராக அவர் பொறுப்பேற்கவும் வாய்ப்புகள் அதிகம் என்றே அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
