மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அந்தேரி மேற்கில் உள்ள காதேவி டோங்கர் பகுதியில், நூர் மசூதிக்கு அருகில் அமைந்துள்ள இந்த எஸ்.ஆர்.ஏ வளாகத்தின் 2-வது கட்டிடத்தில் இந்த தீ விபத்து அரங்கேறியுள்ளது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும் பொதுமக்களிடையே மிகுந்த பீதியும் நிலவியது.
தீ விபத்து ஏற்பட்டவுடன் கட்டிடத்தின் பல பகுதிகளில் அடர்ந்த கரும்புகை சூழ்ந்து கொண்டது, இதனால் உள்ளே இருந்த பல குடியிருப்பாளர்கள் வெளியேற முடியாமல் கட்டிடத்திற்குள் சிக்கிக் கொண்டனர். உயிருக்குப் பயந்து கட்டிடத்தின் உள்ளே சிக்கியிருந்தவர்கள் தங்களைக் காப்பாற்றுமாறு அலறிய சத்தம் அப்பகுதி முழுவதும் எதிரொலித்தது. மேலும், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே, தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் அவசரத்தில் சில குடியிருப்பாளர்கள் கட்டிடத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகளில் இருந்து கீழே குதித்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவலறிந்து மும்பை தீயணைப்புப் படை, டி.என். நகர் காவல் துறையினர் மற்றும் அதானி மின்சார நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட அவசரக்கால மீட்புப் பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததோடு, கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த பலரை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்துக்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன், மாடிகளில் இருந்து கீழே குதித்தவர்களின் தற்போதைய உடல்நிலை குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.
