திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில் இவரது “தமிழக வெற்றிக் கழகம்” கட்சியைப் பலரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், கடந்த தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் இல்லாத நெருக்கடியான சூழலில், அதிமுக – பாஜக பக்கம் செல்லாமல், திமுக கூட்டணியில் இருந்த விசிக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவைப் பெற்று, அவர்களுக்கு அமைச்சரவையிலும் இடம் கொடுத்து ஒரு ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ அரசியல் நகர்வு மூலம் அவர் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
முதலமைச்சராகப் பதவியேற்றது முதல் அவர் சின்சியராக உழைத்து வந்தாலும், பல்வேறு விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறார். குறிப்பாக, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட் நாராயணா மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோருக்கு அரசுப் பொறுப்புகள் வழங்கப்பட்டதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மேலும், தமிழ்நாட்டின் முந்தைய முதலமைச்சர்களைப் போல விஜய் மக்களை நேரடியாகச் சென்று சந்திப்பதில் பெரிய ஈடுபாடு காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கும், அவரது வழக்கமான ‘சைலெண்ட் மோட்’ அணுகுமுறைக்கும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் விஜய் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. முதலமைச்சர் விஜய் இரவு நேரங்களில் மாறுவேடத்தில் மக்களைச் சந்திக்கச் செல்கிறார் என்று தவெக-வைச் சேர்ந்த ஆனந்த்ஜித் கூறியிருந்த நிலையில், விஜய் முதலமைச்சராவதற்கு முன்பு சென்னையில் பைக்கில் ஹெல்மெட் அணிந்து சென்ற பழைய வீடியோ ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில், சாலையில் நின்றவர்களிடம் தற்போதைய முதலமைச்சர் விஜய், “கஸ்தூரிபா நகருக்கு எப்படிச் செல்ல வேண்டும்? அங்கேதான் நடிகர் விஜய் இருக்கிறாரா?” என்று தம்மைக் காட்டிக்கொள்ளாமல் விசாரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன; இதனைப் பலரும் இணையத்தில் பகிர்ந்து ‘மாறுவேடப் பயணம்’ எனக் கொண்டாடி வருகிறார்கள்.
