வியட்நாமில் இந்தியக் குடும்பம் அட்டகாசம்… சிறுவனின் குறும்புத்தனத்தைக் கண்டித்த… உணவக ஊழியர்கள் மீது தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

By Swetha on ஆனி 30, 2026

Spread the love

வியட்நாமில் உள்ள ஒரு உணவகத்தில் இந்திய குடும்பத்தைச் சேர்ந்த சிலர், அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கி, உணவகப் பொருட்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் உணவகத்தில் தவறாக நடந்துகொண்டதை அங்கிருந்த ஊழியர்கள் தட்டிக்கேட்டதால், ஆத்திரமடைந்த அந்தக் குடும்பத்தினர் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

வைரலாகும் அந்த வீடியோவில், இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் சிலர் உணவக ஊழியர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் காண முடிகிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர்கள் ஊழியர்களை ஆக்ரோஷமாகத் தள்ளுவதுடன், மேசையின் மீது இருந்த கண்ணாடிப் பொருட்கள், தட்டுகள் மற்றும் இதர பொருட்களைக் கீழே தள்ளி உடைத்து சேதப்படுத்துகின்றனர். உணவகத்தில் இருந்த மற்ற வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அவர்களைத் தடுக்க முயன்றும் அவர்கள் தொடர்ந்து ஆவேசமாக நடந்துகொண்டனர்.

   

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. வெளிநாடுகளுக்குச் செல்லும் போது இந்தியர்கள் அந்நாட்டின் விதமுறைகளையும் கலாச்சாரத்தையும் மதித்து, பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்கள் ஒட்டுமொத்த இந்தியர்களின் நற்பெயரைக் கெடுக்கும் விதமாக அமைகிறது என்றும் நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதங்கத்தையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.