“அம்பாசமுத்திரத்தில் சீமான் பொதுவேட்பாளரா…? மறுக்காத ஆர்.எஸ்.பாரதி… தமிழ்நாட்டு அரசியலில் திடீர் திருப்பம்…!!”

By Swetha on ஆனி 30, 2026

Spread the love

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், அவர் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஆர்.எஸ். பாரதி, அந்தத் தகவலைத் திட்டவட்டமாக மறுக்காமல், தேர்தல் நேரத்தில்தான் அதுகுறித்துச் சொல்ல முடியும் என்றும், இதுபற்றி கட்சியின் தலைவர்தான் (மு.க.ஸ்டாலின்) இறுதி முடிவு எடுப்பார் என்றும் பட்டும் படாமல் பதிலளித்தார். அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 6 பேர் மற்றும் தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி உட்பட மொத்தம் 7 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், அதற்கேற்றவாறு அரசியல் நகர்வுகள் இருக்கும் என்றும், தேர்தலைச் சந்திக்க திமுக தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திமுகவை விமர்சிக்கும் அதே பாணியில் திருப்பி அடிப்போம் என்று காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பேசியது குறித்துக் கேட்டபோது, ஆர்.எஸ். பாரதி காட்டமாகப் பதிலளித்தார். நாங்கள் பண்டித நேரு, இந்திரா காந்தி போன்ற தலைவர்களையே பார்த்தவர்கள் என்றும், மாணிக்கம் தாகூர் நேற்று முளைத்த காளான் என்றும் விமர்சித்தார். முற்காலத்தில் நேருவே தங்களைக் கண்டு பயந்து ஓடிய வரலாறு எல்லாம் நேற்று வந்தவருக்குத் தெரியாது எனக் குறிப்பிட்ட அவர், பேச வேண்டும் என்பதற்காகப் பேசுகிறார், கொஞ்ச நாளில் அடங்கிவிடுவார் என்றும் சாடினார்.

   

டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம் மற்றும் தற்போதைய ஆட்சி குறித்துப் பேசிய அவர், இந்த அரசாங்கத்தில் எல்லாமே தவறாக நடப்பதாகவும், யாரோ இரண்டு பேர் உட்கார்ந்து கொண்டு உத்தரவுகளைப் பிறப்பிப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், திமுக போராட்டம் நடத்தியதால்தான் தவெக அமைச்சர் சரத்குமார் குறித்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன என்றும், தற்போது அவரை மாற்றப் போவதாக செய்திகள் வருவதாகவும் கூறினார். மக்கள் தற்போது செய்த தவறுக்காக வருந்தி, திமுக பக்கம் திரும்பி வருவதாகவும், எல்லா இடங்களிலும் மாற்றம் தெரிவதாகவும் ஆர்.எஸ். பாரதி இந்த நேர்காணலில் தெரிவித்தார்.