சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த அவரது கணவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த ரேஷ்மா என்ற பெண்ணுக்கும், வெங்கடேஷ் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு சென்னை கெருகம்பாக்கம் பகுதியில் குடியேறிய இந்தத் தம்பதியினர், ரேஷ்மா கர்ப்பமடைந்ததைத் தொடர்ந்து அங்குள்ள ஒரு பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், வேலை விஷயமாக வெங்கடேஷ் அடிக்கடி பெங்களூரு சென்று வந்ததைப் பயன்படுத்தி, ரேஷ்மாவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த வெங்கடேஷ், அக்கம் பக்கத்தினர் தவறாகப் பேசியதை அடுத்து வீட்டை அனகாபுத்தூருக்கு மாற்றியுள்ளார். எனினும் புதிய வீட்டிற்கும் சந்தேகத்திற்குரிய நபர்கள் அடிக்கடி வந்து சென்றதால், மனைவியைக் கண்காணிக்க வீட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசிய கேமரா ஒன்றை பொருத்தியுள்ளார். பின்னர் பெங்களூருவில் இருந்தபடியே தனது செல்போன் மூலம் வீட்டின் காட்சிகளைப் பார்த்தபோது, ரேஷ்மா பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவது வெங்கடேஷுக்குத் தெரியவந்தது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக சென்னை விரைந்து வந்துள்ளார்.
சென்னையடைடந்த வெங்கடேஷ், பிறக்கப்போகும் குழந்தைக்காகத் திருந்தி வாழுமாறும், தன்னுடன் பெங்களூருக்கே வந்துவிடுமாறும் ரேஷ்மாவைச் சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால், அதற்கு மறுப்புத் தெரிவித்த ரேஷ்மா, “என்னை டார்ச்சர் செய்தால் குழந்தையைக் கலைத்துவிடுவேன்” என்று மிரட்டியதோடு, வெங்கடேஷை வீட்டைவிட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த வெங்கடேஷ் வீட்டை விட்டு வெளியேறி, பம்மல் பகுதியில் தங்கி மனைவியைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்.
இந்தச் சூழலில், கடந்த ஜூன் 23-ம் தேதி பைக் டாக்ஸியில் வந்த வெங்கடேஷிடம், அந்த டிரைவர் ரேஷ்மாவின் புகைப்படத்தை ஒரு செல்போன் செயலியில் காட்டி, இவரை அரும்பாக்கம் லாட்ஜில் பார்த்ததாகக் கூறியுள்ளார். இதனால் எல்லையற்ற ஆத்திரமடைந்த வெங்கடேஷ், ஜூன் 24-ம் தேதி அதிகாலையில் ரேஷ்மாவின் வீட்டிற்குச் சென்று அவரைக் கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொலை செய்தார். த தடுக்க முயன்ற ரேஷ்மாவின் தோழிகள் மீது பெப்பர் ஸ்பிரே அடித்துவிட்டு பெங்களூருவுக்குத் தப்பியோடிய வெங்கடேஷை, தனிப்படை போலீஸார் தீவிரமாகத் தேடிப் பிடித்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.
