“அப்படியே ஒரு டெமோ காட்டுங்க பாப்போம்…” அமைச்சர் சரத்குமாரின் மாத்திரை விளக்கத்தை கிழித்து தொங்கவிட்ட கீதாஜீவன்… தூத்துக்குடியில் வெடித்த சர்ச்சை…!

By Visaka on ஆனி 29, 2026

Spread the love

அமைச்சர் சரத்குமாரின் ‘மாத்திரை வீடியோ’ விவகாரத்தில் அவர் அளித்துள்ள விளக்கம் முற்றிலும் அப்பட்டமான பொய் என்று திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கடுமையாகச் சாடியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஐபிஎல் போட்டியின் போது அமைச்சர் ஒருவர் தனது செல்போன் மீது மாத்திரையை வைத்து பொடியாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைச் சுட்டிக்காட்டினார். மேலும், தைரியமிருந்தால் அமைச்சர் சரத்குமார் ஊடகவியலாளர்கள் முன்னிலையில், அதேபோல ஓர் ஆண்ட்ராய்டு போனில் மாத்திரையை வைத்து ஏடிஎம் கார்டால் பொடியாக்கி ஒரு ‘டெமோ’ காட்ட வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.

இந்த வீடியோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும், அப்போது குழந்தைக்கு ஒரு வயது என்பதால் மாத்திரையை பொடியாக்கியதாகவும் அமைச்சர் சரத்குமார் அளித்த விளக்கம் வேடிக்கையாக இருப்பதாக கீதாஜீவன் குறிப்பிட்டு செய்துள்ளார். அந்த வீடியோவில் எந்த இடத்திலும் குழந்தையோ அல்லது மாத்திரையோ தெரியவில்லை என்றும், அமைச்சரின் முகத்தில் எந்தவொரு பதற்றமும் காணப்படவில்லை என்றும் அவர் கூறினார். யாராலும் செய்ய முடியாத ஒரு தில்லான காரியத்தைச் செய்யும்போது பயன்படுத்தப்படும் ‘தக்லைப்’ என்ற வார்த்தையை அவரே அதற்குத் தலைப்பாக வைத்துள்ளதால், மருத்துவ பரிசோதனை மூலமாக மட்டும்தான் அது போதைப்பொருள் இல்லை என்பதை அவர்களால் நிரூபிக்க முடியும் என அவர் வலியுறுத்தினார்.

   

நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் இருக்கும் ஒரு அமைச்சரே இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டால் தமிழகத்தின் எதிர்காலம் என்னவாகும் என்று கேள்வி எழுப்பிய கீதாஜீவன், திமுக ஆட்சிக்காலத்தில் தமிழகப் பொருளாதாரம் பெரும் வளர்ச்சியைப் பெற்றதை நினைவுகூர்ந்தார். போதைத்தடுப்புப் படை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் கூறியிருந்த வாக்குறுதியைச் சுட்டிக்காட்டிய அவர், இளைஞர்களையும் எதிர்காலத் தலைமுறையையும் காப்பாற்ற, தவறிழைத்த அமைச்சர் சரத்குமார் மீது முதலமைச்சர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.