“விளக்கம் கொடுங்க.. இல்லனா பதவியை ராஜினாமா பண்ணுங்க”…. அமைச்சர் சரத்குமாருக்கு தமிழிசை விடுத்த அதிரடி கெடு….!

By Nanthini on ஆனி 29, 2026

Spread the love

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அமைச்சர் ஆர். சரத்குமார் உடனடியாகத் தனது பதவி விலக வேண்டும் அல்லது சர்ச்சைக்குரிய வீடியோ குறித்து முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதிரடியாக வலியுறுத்தியுள்ளார். சென்னையில் பிரதமர் நரேந்திர மோடியின் “மனதின் குரல்” நிகழ்ச்சியைக் கேட்டறிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முகப் பவுடரை பொடி செய்வது போன்ற ஒரு போதைப்பொருள் விவகார வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதைச் சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் ஒருபுறம் முதலமைச்சர் விஜய் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஓட்டங்களை நடத்தும் வேளையில், அமைச்சர்களோ இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

மேலும், இந்த விவகாரத்தைப் பொடி வைத்துப் பேசிவிட்டு, பின்னர் அதனை மருத்துவத்தோடு ஒப்பிட்டுப் பேசியுள்ளதை உலகமே உற்று நோக்குவதாகவும், இதனால் உலக அளவிலான குழந்தை நல மருத்துவர்களே தீவிர ஆராய்ச்சியில் இறங்கியுள்ளதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் இதனைச் சாதாரண நிகழ்வாகக் கடந்து செல்லாமல், இதில் சம்பந்தப்பட்டிருப்பது மருந்தா அல்லது போதை மருந்தா, இதற்குப் பின்னால் உள்ள பின்னணி என்ன என்பது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் போதை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது பேட்டியில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.