அலட்சியத்தால் ஒரு உயிரே போச்சே..! காதில் ப்ளூடூத் இயர்போன்… கையில் மொபைல் போன்.. அலட்சியமாக ஊசி போட்ட செவிலியர்… துடிதுடித்து உயிரிழந்த நோயாளி…!!

By Soundarya on ஆனி 27, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரியில் (BMC), செவிலியரின் கவனக்குறைவால் நோயாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொண்டையில் ஏற்பட்ட சதை வளர்ச்சி காரணமாக அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அந்த நோயாளிக்கு, தகுந்த மருத்துவக் கண்காணிப்பு இல்லாமல் முன்கூட்டியே ஊசி செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட நோயாளியின் மனைவி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், நோயாளிக்கு நரம்பு வழியாக ஊசி செலுத்தும்போது, அங்கிருந்த செவிலியர் தனது மொபைல் போனைப் பயன்படுத்திக் கொண்டும், ப்ளூடூத் இயர்போனை காதில் மாட்டிக் கொண்டும் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த அதீத ஆபத்துள்ள மயக்க மருந்து ஊசி செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே நோயாளிக்குக் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

   

இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அந்த நோயாளி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தின் முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட செவிலியரை மருத்துவமனை நிர்வாகம் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்துள்ளது. மேலும், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேந்திர சுக்லா இந்த அலட்சியம் குறித்து விரிவான விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.