கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரசேரி பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், மாணவர்கள் மூலமாக கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருவதாகப் பள்ளி ஆசிரியர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த அதிர்ச்சி தகவலையடுத்து, பள்ளி நிர்வாகம் உடனடியாகச் செயல்பட்டு ஒவ்வொரு வகுப்பறையாக அதிரடி சோதனையில் ஈடுபட்டது. அப்போது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டிலைச் சோதித்தபோது, அதில் கள்ளச்சாராயம் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக தாமரசேரி போலீசாருக்குப் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் பள்ளிக்கு விரைந்து வந்த போலீசார், சம்பந்தப்பட்ட அந்த மாணவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், மாணவனின் நண்பருடைய வளர்ப்புத் தந்தைதான் கள்ளச்சாராயம் நிரப்பப்பட்ட அந்த பாட்டிலைக் கொடுத்து அனுப்பியுள்ளார் என்ற திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. பள்ளி மாணவர்களைக் குறிவைத்து, அவர்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இந்த சட்டவிரோத கும்பல் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, குற்றவாளியின் வீட்டை நோக்கி விரைந்த போலீசார் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அச்சோதனையின் போது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 28 லிட்டர் கள்ளச்சாராயத்தைப் போலீசார் பறிமுதல் செய்தனர். எனினும், போலீசார் வருவதை முன்கூட்டியே மோப்பம் பிடித்த அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தலைமறைவாக உள்ள அந்த நபரின் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அவரைப் பிடிப்பதற்காகத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பள்ளிக்குத் தண்ணீர் பாட்டிலில் கள்ளச்சாராயம் கொண்டு வந்த பத்தாம் வகுப்பு மாணவரைப் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, உரிய சட்ட நடைமுறைகளுக்குப் பின் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கல்வி கற்கும் புனிதமான இடத்தில், எதிர்காலத் தூண்களாக விளங்க வேண்டிய மாணவர்களை இதுபோன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுத்திய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பெற்றோர்களிடையே மிகுந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
