புனே ககுஞ்சே பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம் தொழிலதிபர் கேதன் விஷால் அகர்வால், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கும் சியா கோயல் என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்ய குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வந்தனர். இந்த நிலையில், தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகக் கேதனை புனே அருகில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க லோஹாகாட் கோட்டைக்குப் பெண் சியா கோயல் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சியா கோயல் தனது ரகசியக் காதலனுடன் சேர்ந்து, கேதன் அகர்வாலை மலையிலிருந்து கீழே தள்ளிவிட்டு கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இக்கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து இளம்பெண் சியா கோயலையும், அவரது காதலனையும் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையில், கொல்லப்பட்ட கேதன் அகர்வாலுக்கு முடி உதிர்வு பிரச்சினை இருந்ததாகவும், அது குறித்து சியா கோயலுக்கு கடும் அதிருப்தி இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. “சியா கோயலுக்கு ஏதேனும் அதிருப்தி இருந்திருந்தால், தனது மகனைக் கொல்வதற்குப் பதிலாகத் திருமண ஏற்பாடுகளை அந்தப் பெண் நிறுத்தியிருக்கலாம்” என்று உயிரிழந்த கேதனின் பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
