மணமேடையில் தள்ளாடிய மாப்பிள்ளை… தாலியே கட்ட வேண்டாம்… அதிரடியாக திருமணத்தை நிறுத்திய துணிச்சல் பெண்… இணையத்தில் குவியும் பாராட்டுகள்…!!

By Swetha on ஆனி 26, 2026

Spread the love

சத்தீஷ்கார் மாநிலம் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 22 வயதான முஸ்கான் பிரதான். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சாந்த் ராம் என்ற இளைஞருக்கும் திருமணம் செய்ய இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். அதன்படி, திருமணத்தன்று மணமகன் வீட்டார் மாப்பிள்ளை சாந்த் ராமை மேளதாளங்களுடன் ஊர்வலமாக அழைத்துக் கொண்டு, மிகவும் உற்சாகமாக மணப்பெண் வீட்டிற்கு வந்தனர்.

மணமகன் வீட்டாரை வரவேற்கக் காத்திருந்த மணப்பெண் வீட்டாருக்கு அங்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மாப்பிள்ளை சாந்த் ராம் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு, போதையில் நிலைதடுமாறி தள்ளாடியபடி வந்துள்ளார். திருமண மேடைக்கு வரும்போது கூட மாப்பிள்ளை சுயநினைவின்றி இவ்வாறு போதையில் தள்ளாடிக் கொண்டிருப்பதைக் கண்டு மணப்பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.

   

இதனைப் பார்த்த மணப்பெண் முஸ்கான் பிரதான், போதையில் வந்தவருடன் தன் வாழ்நாளைத் தொடங்க முடியாது எனத் துணிச்சலாக முடிவெடுத்து, இந்தத் திருமணத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்தார். இதனால் இருவீட்டாருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டது. எனினும், தன் முடிவில் உறுதியாக இருந்து திருமணத்தை நிறுத்திய அந்த இளம்பெண்ணின் தைரியத்தையும் துணிச்சலையும் அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.