“சுயமரியாதையை இழந்துட்டோம்”…. திமுக கூட்டணியை உடைக்கிறாரா வைகோ?…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!

By SATHISH R on ஆனி 25, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய மாற்றங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அருப்புக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரை பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த மதிமுக, தற்போது அக்கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கான அனைத்துப் பூர்வாங்க அறிகுறிகளையும் வைகோவின் இந்த ஆவேசப் பேச்சு வெளிப்படுத்தியிருக்கிறது. தொகுதிப் பங்கீட்டில் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், உரிய அங்கீகாரம் வழங்கப்படாததும் தங்களின் சுயமரியாதையைக் காயப்படுத்தியுள்ளதாக அவர் வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார்.

   

திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக, விசிக ஆகிய கட்சிகளுக்கு தங்களை விட அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டதை வைகோ மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். “காணாமல் போகக்கூடிய நிலையில் இருந்த கட்சிக்கு 10 சீட், ஒரு ராஜ்யசபா சீட் என்றும், பல மாவட்டங்களில் கிளைகளோ அல்லது ஆட்களோ இல்லாத விசிக போன்ற கட்சிக்கு 8 இடங்களும் கொடுத்து திமுக எங்களை அவமானப்படுத்திவிட்டது” என்று வைகோ தன் ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார். தன்மானத்தையும் சுயமரியாதையையும் ஓரளவு இழந்துதான் இத்தனை காலம் திமுக கூட்டணியில் பயணித்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், தன்னைப்போல திமுகவை உயர்த்திப் பிடித்த தலைவர் எவரும் இல்லை என்றும் வேதனைப்பட்டுள்ளார்.

   

அதே வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்து வைகோ பாசிட்டிவான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். விஜய் இன்னும் ஆறு மாத காலத்திற்குள் தன்னை முழுமையாக அரசியல் களத்திற்கு ஆயத்தப்படுத்திக் கொள்வார் என்றும், அவரிடம் வலுவான கருத்தும் காரமும் இருக்கிறது என்றும் பாராட்டியுள்ளார். இதற்கிடையே, தவெக-வுடன் கூட்டணி வைக்க மதிமுக 50 கோடி ரூபாய் பேரம் பேசியதாக எழுந்த அவதூறுகளுக்கு, “எனக்கு பணத்தாசை கொஞ்சம் கூட கிடையாது, நானும் என் மகனும் அண்ணா சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு எதுவும் கட்டிவிடவில்லை” என்று வைகோ உணர்ச்சிவசப்பட்டு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது ‘துரதிஷ்டவசமானது’ என்று வைகோவின் மகன் துரை வைகோ ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நிலையில், வைகோவின் தற்போதைய பேச்சும் அதையே உறுதிப்படுத்துகிறது. “நமது கட்சிக்கான சோதனைக் காலம் முடிந்து வசந்த காலம் வரப்போகிறது; தொண்டர்களின் காயங்களுக்கு விரைவில் மருந்திடுவோம்” என்று உரைத்த வைகோ, தன்மானத்தைக் காக்க கட்சியின் பொதுக்குழுவில் மிக விரைவில் நல்லதொரு இறுதி முடிவு எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். இதன் மூலம், மதிமுக திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு தவெக அரசை ஆதரிக்கும் நோக்கில் புதிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்கத் தயாராகி வருவது தெளிவாகத் தெரிகிறது.