சட்டமன்றத்தில் பரபரப்பு…. “டாஸ்மாக்கில் பார்ட்டி ஃபண்ட்” CM விஜய் சொன்ன அந்த ஒரு வார்த்தை… திமுகவினர் கடும் அமளி…!!

By Soundarya on ஆனி 23, 2026

Spread the love

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உரையாற்றியபோது, டாஸ்மாக்கில் ‘பார்ட்டி ஃபண்ட்’ வசூலிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட விவகாரம் அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் இந்த அதிரடி குற்றச்சாட்டைக் கேட்டு அதிர்ச்சியடைந்த எதிர்க்கட்சியான தி.மு.க உறுப்பினர்கள், தங்களது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஆவுடையப்பன் அவர்கள் தொடர்ந்து முழக்கமிட்ட தி.மு.க-வினரை அமைதிப்படுத்த முயன்றும், அவர்கள் கேட்காமல் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தினர்.

இந்த அமளியின் போது, தி.மு.க உறுப்பினர்கள் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்களை நோக்கி ஒருமையில் பேசுவதாக த.வெ.க அமைச்சர் ராஜ்மோகன் அவையில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். உடனே அவையை முறைப்படுத்த முற்பட்ட அவை முன்னவர் செங்கோட்டையன், “தி.மு.க-வினர் தங்களது சொந்த ஆட்சியின் வழிமுறைகளையும், அவை விதிகளையும் முறையாகப் பின்பற்ற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். மேலும், முதலமைச்சர் விஜய் பேசி முடித்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்குப் பேசுவதற்குத் தகுந்த அனுமதி வழங்கப்படும் என்று சபாநாயகர் உறுதி அளித்து விவாதத்தை அமைதியாக நடத்த ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

   

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவை வழக்கம் போலத் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர் விஜய், “மக்கள் பணி செய்ய தெரிந்த அளவிற்கு த.வெ.க அரசுக்கு ஊழல் செய்ய தெரியாது” என்றும், “இது மக்களாட்சி என்பதால் தங்களை விமர்சனம் செய்ய எல்லாருக்கும் உரிமை உண்டு” என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். டாஸ்மாக் பார்ட்டி ஃபண்ட் விவகாரத்தால் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே சட்டமன்றத்தில் ஏற்பட்ட இந்த நேரடி மோதல் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.