உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் பஞ்சர் கடை நடத்தி வரும் ராஜ் பிரஜாபதி என்ற ஏழைத் தொழிலாளியின் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி, ரூ.28 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்யப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வாரணாசி மத்திய சரக்கு மற்றும் சேவை வரி துறையிடமிருந்து ராஜ் பிரஜாபதிக்கு ரூ.28 கோடி ஜிஎஸ்டி நிலுவை இருப்பதாகக் கூறி சம்மன் வந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். அந்த சம்மனில், அவரது பெயரில் ‘மெஸ்ஸர்ஸ் கேட்ஜெட்ரிக் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட்’ என்ற போலி நிறுவனம் தொடங்கப்பட்டு, ரூ.100 கோடி வர்த்தகம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
விசாரணையில், ராஜ் பிரஜாபதியின் கிராமத்தைச் சேர்ந்த அமித் குப்தா என்பவர், ராஜ் பிரஜாபதியின் தங்கை திருமணத்திற்காக ரூ.30,000 கடன் வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி, அவரது ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் கையெழுத்து ஆகியவற்றை வாங்கியுள்ளார். அந்த ஆவணங்களை தவறாகப் பயன்படுத்தி, அமித் குப்தா ஒரு போலி நிறுவனத்தைத் தொடங்கி, யெஸ் வங்கியில் கணக்கையும் ஆரம்பித்து இந்த பிரம்மாண்ட மோசடியை அரங்கேற்றியுள்ளார். பின்னர், பெரும் தொகையை வரி ஏய்ப்பு செய்துவிட்டு அந்த நிறுவனத்தை மூடியும் உள்ளார்.
இந்த மோசடி குறித்து பாதிக்கப்பட்ட தொழிலாளி கோரக்பூர் எய்ம்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வாரணாசி ஜிஎஸ்டி அதிகாரிகள் ராஜ் பிரஜாபதியின் கிராமத்திற்கு நேரடியாகச் சென்று அவரது ஏழ்மை நிலையையும் பஞ்சர் கடையையும் கண்டு அதிர்ச்சியடைந்து திரும்பியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் காவல்துறை, சேகரிக்கப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
