கணவனே எமன்…. அன்னூர் கிணற்றில் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்…. 4 நாளில் வெளியான பகீர் உண்மை….!

By Nanthini on ஆனி 23, 2026

Spread the love

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே மேட்டுப்பாளையம் – அன்னூர் சாலையில் உள்ள ராசிபுரம் பகுதியில், மூடப்பட்டுக் கிடக்கும் தனியாருக்குச் சொந்தமான தொழிற்சாலை வளாகக் கிணற்றிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் காவல் துறையினர், கிணற்றிற்குள் சோதனை நடத்தியபோது அங்கு சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் சடலத்தை மீட்ட போலீசார், உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, கொலையுண்ட பெண் யார், கொலையாளி யார் என்பது குறித்து தீவிரப் புலனாய்வு விசாரணையைத் தொடங்கினர்.

காவல் துறையினரின் அதிரடி விசாரணையில், கொலையான பெண் யார் என்ற விபரம் தெரிந்ததோடு, கொடூரக் கொலையைச் செய்தது வேறு யாருமல்ல, அவரது கணவரே என்பது அம்பலமாகியுள்ளது. கட்டிடத் தொழிலாளியான சோட்டாலால் என்பவர், தனது மனைவியைக் கொலை செய்து, ஆதாரங்களை மறைப்பதற்காக உடலைச் சாக்கு மூட்டையில் கட்டி பாழடைந்த கிணற்றில் வீசிச் சென்றுள்ளார். சடலம் மீட்கப்பட்ட நான்கு நாட்களுக்குள் கொலையாளியைக் கண்டறிந்த போலீசார், சோட்ட லாலை அதிரடியாகக் கைது செய்தனர். குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்துக் கைதான கணவரிடம் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.