பீகார் மாநிலம், நௌபத்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் நடனமாடுவதற்காக இரண்டு பெண்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். அங்கிருந்த முன்னா குமார் என்ற நபர், அந்தப் பெண்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டித் தனியாகக் கடத்திச் சென்றுள்ளார். பின்னர், ஒரு கும்பலிடம் அந்தப் பெண்களை அவர் ஒப்படைத்ததாகத் தெரிகிறது.
அங்கு அந்த இரண்டு பெண்களும் சுமார் 13 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இரவு முழுவதும் அந்தப் பெண்களுக்கு நேர்ந்த இந்த அநீதியைத் தொடர்ந்து, மறுநாள் காலையில் அந்தக் கும்பல் அந்தப் பெண்களை ஒரு வாகனத்தில் ஏற்றி வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.
அப்போது, வாகனம் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, தங்களை எப்படியாவது காப்பாற்றுமாறு அந்தப் பெண்கள் இருவரும் சத்தமாக கூச்சலிட்டுள்ளனர். இவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு அப்பகுதி மக்கள் வாகனத்தை வழிமறித்து, பெண்களை மீட்க முயன்றதோடு காவல் துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
