பள்ளிக்கு அழைத்துச் சென்ற காரில் கொடூரம்… 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர்… சக மாணவியால் வெளிவந்த பகீர் உண்மை…!!

By Swetha on ஆனி 22, 2026

Spread the love

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த 52 வயதுடைய ஆமோஸ் தேவசகாயம், கடந்த பிப்ரவரி 22 அன்று தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க மாணவிகளை அழைத்துச் சென்றுள்ளார். போட்டிகள் முடிந்த பிறகு, மற்ற மாணவிகள் பேருந்தில் செல்ல, பாதிக்கப்பட்ட 15 வயது 10-ஆம் வகுப்பு மாணவியையும் அவரது தோழியையும் தனது காரில் அழைத்து வந்துள்ளார். அப்போது, காரின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த மாணவியிடம் ஆசிரியர் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதோடு, இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டி இருவரையும் பள்ளி வளாகத்தில் இறக்கிவிட்டுள்ளார்.

காரின் பின்பக்க இருக்கையில் அமர்ந்து இந்த சம்பவத்தைக் கவனித்த மாணவியின் தோழி அச்சமடைந்து, சில நாட்களுக்குப் பிறகு இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராமபிரியா புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

   

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆசிரியர் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதியானதைத் தொடர்ந்து, உடற்கல்வி ஆசிரியர் ஆமோஸ் தேவசகாயம் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி மாணவியிடம் உடற்கல்வி ஆசிரியரே இத்தகைய அத்துமீறலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள இந்தச் சம்பவம், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.