சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் தன்னை ‘கஞ்சா வியாபாரி’ என்று அவதூறாகப் பேசியதாக, திருநங்கை வைஷூ இன்று மீண்டும் பரபரப்புக் புகார் ஒன்றை அளித்துள்ளார். நாஞ்சில் விஜயன் தன்னிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதைப் போலவே, சூர்யா தேவியிடமும் பணம் வாங்கி ஏமாற்றியிருக்கலாம் என்று குற்றம் சாட்டிய அவர், இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜயும், காவல் ஆணையர் அலுவலக அதிகாரிகளும் தலையிட்டுத் தனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், கடந்த முறை புகார் அளித்தபோது நாஞ்சில் விஜயன் மீது தனக்குக் காதல் இருந்ததால் புகாரைத் திரும்பப் பெற்றதாகவும், ஆனால் இந்த முறை எந்தக் காரணத்தைக் கொண்டும் புகாரை வாபஸ் பெறப் போவதில்லை என்றும், தன்னை இழிவுபடுத்தியதற்காக அவர் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வைஷூ உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
நாஞ்சில் விஜயனின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தும் ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறிய வைஷூ, அவருடன் 16 ஆண்டுகள் பழகியிருப்பதுடன், 7 ஆண்டுகள் குடும்பம் நடத்தியுள்ளதால் அவரைப் பற்றி தனக்கு முழுமையாகத் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு முன்னால் நாஞ்சில் விஜயன் நல்லவரைப் போல நடித்து வருவதாகச் சாடிய அவர், ஒரு திருநங்கையாகச் சினிமாவில் 15 வருடங்கள் கஷ்டப்பட்டுத் தான் இந்த நிலைக்கு வளர்ந்து வந்துள்ள நிலையில், தன்னை எப்படிக் கஞ்சா வியாபாரி என்று கூறலாம் எனக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
அதோடு நிறுத்தாமல், நாஞ்சில் விஜயன் தனக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்களும், பிளாக்மெயில் மிரட்டல்களும் விடுத்து வருவதாக வைஷூ பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். “நீ எந்தெந்த இடங்களுக்கெல்லாம் சினிமா வாய்ப்பு கேட்டுப் போகிறாயோ, அங்கெல்லாம் வாசலில் கூட உன்னை நுழைய விடமாட்டேன்” என்று நாஞ்சில் விஜயன் மிரட்டுவதாகவும், தனது வீட்டுக்கே வந்து தன்னை நாசப்படுத்திவிடுவேன் என்று பயமுறுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். “இதெல்லாம் ஒரு ஆணுக்கு அழகா?” என்று கேள்வி எழுப்பியுள்ள வைஷூ, இனி எந்த இடத்திலும் தனது பெயரை நாஞ்சில் விஜயன் பயன்படுத்தக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
