கஜானாவில் காசில்லை என்று கூறிவிட்டு, மக்கள் வரிப்பணத்தில் முதலமைச்சரின் பிறந்தநாளுக்காக இப்படி 2 நாட்கள் இலவச அனுமதி வழங்குவதா என்று தி.மு.க தரப்பில் ஆவேசமாகப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் வருவாய் இழப்பு, வாயில்லா ஜீவன்களின் உணவு மற்றும் ஊழியர்களின் சம்பளத்திற்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்பியுள்ள தி.மு.க, ‘Shadow CM’ மற்றும் அமைச்சர்கள் சேர்ந்து தமிழ்நாட்டைச் சூறையாடுவதாகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
தி.மு.க-வின் இந்தக் கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தினர் சமூக வலைத்தளங்களில் மிகக் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர். அரசுப் பணத்தை வாரி வீட்டிற்கு கொண்டு போகத் தாங்கள் ஒன்றும் கோபாலபுரத்துக் கொள்ளைக்காரர்கள் அல்ல என்றும், கடும் நிதிச்சுமையிலும் கடலில் பேனா கட்ட மக்கள் பணத்தைக் கரைக்க முயன்ற அறிவாலயம் குரூப் தங்களை விமர்சிப்பதா என்றும் த.வெ.க-வினர் திருப்பி அடித்துள்ளனர்.
மேலும், 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே கையிருப்பு என்று பொய் சொல்லிவிட்டு டிஃபெண்டர் காரில் உலா வரும் முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ-வின் வேலைகளைத் தங்கள் மீது கட்ட வேண்டாம் என்றும் த.வெ.க தரப்பில் சாடப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை வனத்துறை அமைச்சர் தனது சொந்த அறக்கட்டளை மூலம் அரசாங்கத்திற்கு வழங்கப் போகிறார் என்ற உண்மையை இப்போதாவது உள்வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ள த.வெ.க-வினர், தி.மு.க ஐடி விங்கை ‘ஆர்வக்கோளாறு ஐடி விங்’ என்று பெயரை மாற்றிக் கொள்ளலாம் என்றும், தோல்வியிலிருந்து வெளியேற முடியாமல் விஷ மனநிலையில் பொய்ப் பதிவுகளைப் பரப்புவதாகவும் தங்களது கண்டனப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளனர்.
