ஐயோ கொடுமையே…! அதிவேக ரேஸில் புகுந்த முதியவர்… பொம்மை போல காற்றில் பறந்து விழுந்த வீரர்கள்…! நெட்டிசென்கள் கண்டனம்…!

By Swetha on ஆனி 17, 2026

Spread the love

ஜெர்மனியின் சார்லாந்து பகுதியில் ஐரோப்பா முழுவதிலுமிருந்து 100-க்கும் மேற்பட்ட இளம் வீரர்கள் பங்கேற்ற ஜூனியர் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. போட்டியின் இறுதி கட்டத்தில், வீரர்கள் அனைவரும் மிக அதிவேகமாக சாலையில் வந்துகொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த முதியவர் ஒருவர், பந்தயத்தை நெருக்கமாகப் பார்ப்பதற்காகத் தனது மூன்று அல்லது நான்கு சக்கரங்கள் கொண்ட ‘மொபிலிட்டி ஸ்கூட்டரை’ ஓட்டிக்கொண்டு திடீரென பந்தயப் பாதையின் நடுவே நுழைந்தார்.

மிக அதிவேகத்தில் வந்துகொண்டிருந்த சைக்கிள் வீரர்களால் திடீரென குறுக்கே வந்த ஸ்கூட்டரை கண்டு உடனே கட்டுப்படுத்த முடியவில்லை. முன்னால் வந்த ஒரு வீரர் அதிலிருந்து தப்பிக்க, அவருக்குப் பின்னால் வந்த டச்சு நாட்டைச் சேர்ந்த பால் வ்ரீஸ்மேன் என்ற வீரர் அந்த ஸ்கூட்டர் மீது பலமாக மோதினார். இதில் நிலைதடுமாறிய அவர் காற்றில் தலைகீழாகப் பறந்து சாலையில் விழுந்தார். அவரைத் தொடர்ந்து பின்னால் வந்த பல வீரர்களும் அடுத்தடுத்து ஒருவர் மீது ஒருவர் மோதி விழுந்ததால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.

   

இந்தக் கொடூர விபத்தில் நான்குக்கும் மேற்பட்ட வீரர்கள் சாலையில் விழுந்து காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக, விபத்தில் சிக்கிய வீரர்களுக்கோ அல்லது அந்த முதியவருக்கோ பெரிய அளவில் உயிருக்கு ஆபத்தான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தின் வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பந்தய அமைப்பாளர்களின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தும், பந்தயப் பாதையில் கவனக்குறைவாக நுழைந்த அந்த முதியவரின் செயல் குறித்தும் நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களையும் விவாதங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.