ஒடிசா மாநிலம் மயூர்வஞ்ச் மாவட்டத்திலுள்ள சிம்லிபால் வனப்பகுதியில், சமூக ஊடகங்களில் பிரபலமடைவதற்காக ஒரு இளைஞர் குழு காட்டு யானைகளைத் தொடர்ந்து வம்புக்கு இழுத்து துன்புறுத்தி வரும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பிரஷாந்த் ராய் என்ற எக்ஸ் பயனர் ஆதாரங்களுடன் வெளியிட்ட இந்த வீடியோக்களில், ஐந்து இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் சென்று காட்டு யானைகளைத் தேடி கண்டுபிடிப்பதும், அவற்றுக்கு மிக அருகில் சென்று அச்சுறுத்துவதும் பதிவாகியுள்ளது. குறிப்பாக, ஒரு குட்டி யானையை அவர்கள் குறிவைத்து சீண்டுவதும், மற்றொரு காட்சியில் ஒரு வாலிபர் கையில் குச்சியுடன் யானைக்கு மிக அருகில் நின்று அதனைக் குத்தி கோபமூட்டுவதும் நெட்டிசன்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.
விலங்குகளைப் பாதுகாக்கும் ‘யானை ஆர்வலர்கள்’ என்று தங்களது இன்ஸ்டாகிராம் சுயவிவரப் பக்கங்களில் பெருமையாகக் குறிப்பிட்டுள்ள இந்த இளைஞர்கள், அதற்கு முற்றிலும் முரணாக வியூஸ்கள் மற்றும் லைக்குகளுக்காக இந்தச் சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளனர். தங்களின் பொழுதுபோக்கு மற்றும் மலிவான விளம்பரத்திற்காக சாதுவான அந்த விலங்குகளை எல்லை மீறி கோபப்படுத்துவது வனவிலங்கு வன்கொடுமை மற்றும் ஒட்டுமொத்த காடுகளின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக விளங்குவதாகப் பதிவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த இளைஞர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளைப் பகிர்ந்து, இவர்களின் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறை மற்றும் இணையக் குற்றப் பிரிவினருக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
வனவிலங்குகளைத் துன்புறுத்தும் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் எதிர்காலத்தில் பெரும் அசம்பாவிதங்களில் போய் முடியும் எனப் பலரும் எச்சரித்துள்ளனர். நாளைக்கு இவர்களின் இத்தகைய செயலால் பொறுமை இழந்த யானை ஏதேனும் ஒரு மனிதரைத் தாக்கினால், ஊடகங்கள் ‘மிரண்ட யானை மனிதனைக் கொன்றது’ என்றே தலைப்பிடுமே தவிர, அந்த அப்பாவி விலங்கை இந்த இளைஞர்கள் எவ்வளவு தூரம் வற்புறுத்தி வழிக்குக் கொண்டு வந்தார்கள் என்பதை யாரும் காட்ட மாட்டார்கள் என்ற கடுமையான விமர்சனமும் எழுந்துள்ளது. மனித-விலங்கு மோதல்கள் அதிகரித்து வரும் சூழலில், சமூக ஊடக உள்ளடக்கங்களுக்காக (Content) வனவிலங்குகளைப் பகடைக்காயாக்குவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
