இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்ற விருப்பத்துடன் செயல்பட்டு வருகின்றனர். அவ்வாறு நிலம் வாங்கும் போதும் மற்றும் விற்பனை செய்யும் போதும் சரியான ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகவும் அவசியமானதாகும். குறிப்பாக நில மோசடிகளைத் தடுப்பதற்கும், உரிமை தொடர்பான பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கும் நில ஆவணங்களை முன்கூட்டியே ஆய்வு செய்வது முக்கியம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து சேவைகளும் டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில், பொதுமக்கள் எளிதாக நில விவரங்களை அறிந்து கொள்ள தமிழ்நாடு அரசு https://eservices.tn.gov.in என்ற இணையவழி வசதியை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் ஒருங்கிணைந்த நில ஆவண மேலாண்மை அமைப்பின் கீழ் செயல்படும் இந்த இ-சேவை இணையதளத்தின் மூலம், ஒரு நிலத்தின் உரிமையாளர் யார், அந்த நிலம் தனியாருக்கா, அரசுக்கா அல்லது பொதுநிலமா என்பன உள்ளிட்ட அடிப்படை விவரங்களையும், பட்டா, சிட்டா போன்ற ஆவணங்களையும் வீட்டிலிருந்தபடியே பொதுமக்கள் எளிதாகச் சரிபார்த்துக் கொள்ள முடியும். ஆன்லைன் வசதி மட்டுமின்றி, பொதுமக்கள் இ-சேவை மையங்கள் மூலமாகவும் பட்டா தொடர்பான சேவைகளைப் பெறலாம். அடையாளச் சான்று, நிலவரி ரசீது, மின்கட்டண ரசீது மற்றும் பழைய பட்டா, சிட்டா ஆவணங்களைக் கொண்டு பட்டா மாற்றம், பட்டா சரிபார்ப்பு மற்றும் வில்லங்கச் சான்றிதழ் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இ-சேவை மையங்கள் மூலம் எளிதாக மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
