“டேய் அப்பா கூப்பிடுறேன்டா எழுந்திருடா..” செருப்பைக் கழற்றும்போது நேர்ந்த கொடூரம்… பிணமாகக் கிடந்த மகனுக்கு CPR செய்து கதறிய தந்தை.. நெஞ்சை உலுக்கும் காட்சி..!!

By Soundarya on ஆனி 17, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனில் உள்ள இஸ்கான் கோவில் அருகே, மின்சாரம் தாக்கி 21 வயது வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அவிக்யான் குப்தா என்ற அந்த இளைஞர், தனது தந்தையுடன் சாமி தரிசனம் செய்வதற்காகக் கோவிலுக்கு வந்துள்ளார். கோடை வெப்பத்தைத் தணிப்பதற்காகக் கோவில் நுழைவாயில் அருகே நகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த ஏர் கூலரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, இந்த விபத்து நேரிட்டுள்ளது. கோவில் காலணி வைக்கும் இடத்தில் செருப்பைக் கழற்றும்போது எதிர்பாராதவிதமாகக் கூலரைத் தொட்ட அவிக்யான் மீது மின்சாரம் பாய்ந்தது.

மகனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தந்தை அமித் குமார் குப்தா, அவரை மீட்க முயன்றும் பலத்த மின் அதிர்வால் தூக்கி வீசப்பட்டார். அதன்பின் அங்கிருந்த பக்தர்கள் அவிக்யானை மீட்டு உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவமனையில் தனது ஒரே மகனின் உடலைப் பார்த்து கதறிய தந்தை, “எழுந்திரு மகனே, அப்பா கூப்பிடுகிறேன்” என்று கூறி நெஞ்சுப் பகுதிக்குச் செயற்கை சுவாசம் அளித்து எழுப்ப முயன்ற உருக்கமான வீடியோ இணையத்தில் வைரலாகி பார்ப்போர் நெஞ்சை உலுக்கி வருகிறது.

இந்தக் கொடூர விபத்து உள்ளூர் மக்களிடையேயும், பக்தர்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலத்தில் மின் சாதனங்களை முறையாகப் பராமரிக்காமல் அலட்சியமாக இருந்த நகராட்சி நிர்வாகமே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், இளைஞரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.