முந்தைய திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டதாக தவெக அரசின் நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கைக்கு, முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். தவெக தனது ஆட்சிக்கால முடிவில் தமிழ்நாட்டின் கடனை ரூ.20 லட்சம் கோடியாக உயர்த்தப் போகிறது என்று சாடிய அவர், “திமுக ஆட்சியில் வாங்கிய கடனை விடவும், தவெக ஆட்சியில் குறைவாகக் கடன் பெற்று திட்டங்களை நிறைவேற்றிக் காட்டினால், நான் எனது அரசியல் பொறுப்பில் இருந்தே விலகிக் கொள்கிறேன்” என அதிரடி சவால் விடுத்துள்ளார்.
மேலும், தவெக அரசு தனது புதிய திட்டங்களை ஆளுநர் உரையில் இடம் பெறச் செய்வதைத் தவிர்க்கவே இந்த வெள்ளை அறிக்கையை ஒரு தந்திரமாக வெளியிட்டுள்ளது என்றும் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார். தவெக தனது தேர்தல் வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்ற ரூ.6 லட்சம் கோடி தேவைப்படும் என்று சுட்டிக்காட்டிய அவர், முந்தைய ஆட்சிகளைப் பற்றிய விவரங்களை மறைத்து, வெறும் 5 ஆண்டுகளை மட்டுமே கணக்கில் கொண்டு தற்போதைய வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருப்பது யாரைக் காப்பாற்றுவதற்காக என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
